×

பீமன் வழிபட்ட பரமத்தி எயிலிநாதர் கோயில்

நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த நன்செய் இடையாறில் இருக்கிறது சோழ மன்னர்களால் கட்டப்பட்ட எயிலிநாதர் கோயில். திருவேலிநாதர் என்றும் அழைக்கப்படும் சிவன், சுந்தரவல்லி தாயாருடன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். சுயம்புலிங்கம் என்பது தானாக தோன்றுவதாகும். இதன்படி இறைவன் தானாக விரும்பி அமர்ந்த இடங்கள் பல உண்டு. இந்த வகையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 5 சுயம்புலிங்கத் தலங்கள் உள்ளன. அதில் ஒன்று தான், நன்செய் இடையாறு எயிலிநாதர் கோயில் என்பது பெரும் சிறப்புக்குரியது. காவிரி ஆற்றுக்கும், அதன் கிளை நதியான திருமணி முத்தாற்றுக்கும் இடையே உள்ள செழிப்பான பகுதியே நன்செய் இடையாறு என்று அழைக்கப்படுகிறது. ஊரைச்சுற்றி ஏராளமான பெருந்தெய்வ, சிறுதெய்வ கோயில்களும் உள்ளன.

இந்த கோயிலின் சுற்று மதிலுக்குள்ளே சீனிவாச பெருமாள் கோயிலும் இருப்பது வியப்பு. முதலாம் ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்த கோயிலை கட்டியதாக கல்வெட்டு குறிப்புகள் கூறுகிறது. பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில், பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தகவல்கள் கூறுகிறது. பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் தான் இந்த கோயிலில் உள்ளது. பீமன் நல்லவன் தான். ஆனால் தன்னைவிட பலசாலியோ, வலியவரோ இந்த உலகில் கிடையாது என்ற ஆணவம் மட்டும் அவனுக்குள் இருந்துள்ளது. அவனுக்கு புத்திபுகட்ட, திருமால் செய்த ஏற்பாட்டின் படி, சிவபெருமான் புருஷாமிருகம் ஒன்றை ஏவினார்.

மனித உடலும், மிருகத்தலையும் கொண்ட அந்த உருவம் துரத்திய போது, பீமனால் எதிர்கொள்ள முடியவில்லை. அவன் உயிரை காப்பாற்ற கோவிந்தா, கோபாலா என்று கதறிக் கொண்டே ஓடினான். இறுதியில் சிவபெருமானின் அருளால் அந்த மிருகத்திடம் இருந்து தப்பினான். இதற்காக சேர்வராயன் மலையில் உற்பத்தியாகி, திருமணி முத்தாறு பாய்ந்து செல்லும் 5 கரைகளில் சிவபூஜை செய்தான். அங்கெல்லாம் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளினார். இந்த கோயில்கள் சுகவனேஸ்வரர் கோயில், கரபுரநாதர் கோயில், வீரட்டீஸ்வரர் கோயில், பீமேஸ்வரர் கோயில், எயிலிநாதர் கோயில் என்று வழிபடப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், நால்வர், நந்திதேவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இங்குள்ள மக்கள் திருமணங்களை நடத்த, முற்றிலும் இலவசமாக கோயிலில் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் எயிலிநாதரை வழிபட்டுச் செல்கின்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரங்கள் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். தினசரி காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். பிரதோஷம், மார்கழி திருவாதிரை, அருத்ரா தரிசனம் என்று சிவனுக்கு உகந்த திருவிழா நாட்கள் அனைத்தும் இங்கு கோலாகலமாக நடக்கும். தமிழ்புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை விழாக்களும் களை கட்டும். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவனையும், அன்னையையும் தரிசித்து இறையருள் பெற்றுச் செல்கின்றனர்.

Tags : Ellinathar Temple ,Bhima ,
× RELATED திருச்சி பீம நகரில் வாலிபர் திடீர் மாயம்